Onbadhu Rubaai Nottu - cinema - Villagers life in celluloid

on Monday, December 10, 2007

ஒன்பது ரூபாய் நோட்டு
-

Published by : yahoo.com

தன்னைச் சுற்றியிருப்பவர்கள் நலனில் அக்கறை கொண்டு, அவர்களை வாழவைக்கும் ஒர் உன்னத மனிதர், குடும்பச் சூழல் காரணமாக ஒன்பது ரூபாய் நோட்டாக (செல்லாத நோட்டு) மாற நேரும் நிலையை இயல்பு மீறாமல் பதிவு செய்திருப்பதே இப்படம்!

தன் மண்ணையும் விவசாயத்தையும் உயிராக நேசிப்பவர் மாதவர் படையாட்சி (சத்யராஜ்). பூமியையே சாமியாக நினைத்து வாழும் அவர், மண்ணில் விளைவதை முடிந்தவரை பிறர்க்கும் கொடுப்பவர். அவரது பிள்ளைகளுக்கு திருமணமாகி, ஒரு வருத்தம் மிகுந்த சம்பவம் நிகழ்ந்தவுடன், கட்டியத் துணியோடு வீட்டை விட்டு வெளியேறிவிடுகிறார் மனைவி வேலாயியுடன் (அர்ச்சனா).

சுய கெளரவத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு எந்தத் தொழிலும் செய்ய முடியாத நிலையில், தன் நண்பன் ஹாஜாபாய் (நாசர்) உதவியுடன் கிடை ஆடு போட்டு வளர்த்து தனியே வசிக்கிறார்கள், அந்தத் தம்பதியர்.

அதன்பின், அவர்கள் சந்திக்கும் வாழ்க்கைப் போராட்டமும், பாசப் போராட்டமும் மீதிக்கதை. வர்த்தக நோக்கம் கலந்திடாமல் தமிழ் மக்களின் மண், மொழி, கலாச்சாரம் சார்ந்த யதார்த்த வாழ்வை உலக சினிமா தரத்தில் வடித்திருக்கிறார், தங்கர்பச்சான்.

ஒரு பேருந்து பயணத்தில் தொடங்கி, அப்பயணம் நிறைவடையும்போது கதையும் முடிவடைகிறது. இந்த உத்தியும், கதைச் சொல்லலும் அருமையான வடிவம்.

கதைக்களமாக முந்திரிக்காடு, பலா மரத் தோப்பு, எள் வயல் என அழகும் உண்மையும் கலந்த கலவை, நம்மை பிரம்மிக்கமட்டுமின்றி, சிலிர்க்கவும் வைக்கிறது.மாதவர் படையாட்சியாக வாழ்ந்திருக்கும் சத்யராஜ், நடிப்பின் உச்சத்தைத் தொட்டுவிட்டார்.

உன்னத உழைப்பாளராக மட்டுமின்றி, இறந்த பிறகு சடலமாக சில நிமிடங்கள் நடித்தும் அசத்தியுள்ளார். சத்யராஜுக்கு சரிநிகர் சமமாக அசத்தியிருக்கிறார் அர்ச்சனா.

ஒரு தாயின் சுய மரியாதையை மட்டுமல்ல; பாசத்தையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.நாசரும், ரோகிணியும் படத்துக்கு உறுதுணைபுரியும் பாத்திரங்கள்.

தண்டபாணியாக நடித்திருக்கும் டான்ஸ்மாஸ்டர் சிவங்கர், கோவணம் கட்டிய வில்லன், பள்ளிக் கூடத்தானாக வரும் சூர்யகாந்த், ராமலிங்கமாக வரும் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் படத்துக்கு உயிரூட்டுகின்றனர்.

புதுமுகம் இன்பநிலா, கிராமங்களில் உலா வரும் நிஜ தேவதை.

ஒளிப்பதவு (தங்கர்), இசை (பரத்வாஜ்), பாடல்கள் (வைரமுத்து)... இம்மூன்று முக்கனிகளாய் திகழ்கின்றன!

மொத்தத்தில் இந்த 'ஒன்பது ரூபாய் நோட்டு'க்கு எதிரான மதிப்பினைக் கொண்ட டாலர்களை டெபாசிட் செய்ய, ஓரிலக்க எண்ணிக்கையிலான வங்கிகள் போதாது எனலாம்!



To know more details please contact @ http://www.sbeermohamed.co.nr/

visit my Village http://www.kuruvikkarambai.co.cc/

0 comments: